மேலோட்டம்

விலா எலும்பு முறிவு என்றால் என்ன?

முறிந்த அல்லது உடைந்த விலா எலும்பு என்பது விலா எலும்புக் கூண்டில் உள்ள எலும்புகளில் ஒன்றில் ஏற்படும் விரிசல் அல்லது முறிவைக் குறிக்கிறது. எலும்புக் கூண்டில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. அவை குருத்தெலும்பு மூலம் மார்பெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. விலா எலும்புகளின் வளைந்த வடிவமைப்பு இயற்கையாகவே காயத்தை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருந்தாலும் விலா எலும்பு முறிவுகளும் காயங்களும் பொதுவாக ஏற்படுபவையாக உள்ளன. இவை மார்புப் பகுதிக்கு ஏற்படும் அதிர்ச்சியால் ஏற்படுகின்றன. விலா எலும்புகள் மார்பில் அமைந்துள்ள உறுப்புகளைப் பாதுகாத்து சுவாசத்திற்கு உதவுவதால், விலா எலும்பு முறிவு சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

விலா எலும்பு முறிவுகளின் வகைகள்

இடம்பெயர்ந்த மற்றும் இடப்பெயர்ச்சியற்ற விலா எலும்புகளின் எக்ஸ்ரே

விலா எலும்புகள் பாதியாக உடைந்தால், அவை இடத்தை விட்டு நகரும். இது இடம்பெயர்ந்த விலா எலும்பு முறிவு என அழைக்கப்படுகிறது மற்றும் இவை நுரையீரலைத் துளையிடுதல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். தன்னிடத்திலேயே முறிந்து இருக்கும் விலா எலும்பு இடப்பெயர்ச்சியற்ற விலா முறிவு என்று அழைக்கப்படுகிறது.

விலா எலும்பு முறிவுகள் அதிக பிரச்சனை அற்றவையாகவோ அல்லது சிக்கலானதாகவோ இருக்கலாம்.

‘ஹேர்லைன்’ எலும்பு முறிவுகள் என்றும் அழைக்கப்படும் எளிய எலும்பு முறிவுகள் பொதுவாக இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகாத ஒரு விலா எலும்பை மட்டுமே பாதிக்கும்.

சிக்கலான விலா எலும்பு முறிவுகள் பல விலா எலும்புகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இடப்பெயர்ச்சிக்கு உள்ளானவையாகவும் இயற்கையில் மிகவும் கடுமையானவையுமாக உள்ளன.

விலா எலும்பு முறிவின் ஒரு தீவிர வகை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலா எலும்புகள் அடுத்தடுத்து முறிந்திருப்பது அல்லது மார்பு சுவரின் ஒரு பகுதி மீதமுள்ள மார்பு சுவரிலிருந்து சுதந்திரமாக நகர்வது. இது நிகழும்போது, மார்புச் சுவரின் ஒரு பகுதி மற்ற விலா எலும்புகளிலிருந்து பிரிந்து, சுதந்திரமாக மிதக்கும் பிரிவாக மாறும். இது மீதமுள்ள விலா எலும்புகளிலிருந்து சுயாதீனமாக நகரும். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிப்பார்கள் மற்றும் சுவாசிக்கும்போது அவர்களின் மார்புகளும் சீரற்ற முறையில் நகரும்.

சிகிச்சையளிக்கப்படாத விலா எலும்பு முறிவுகளின் சிக்கல்கள்

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், விலா எலும்பு முறிவுகள் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும், அவை:

 • துளையிடப்பட்ட நுரையீரல்
 • சரிந்த நுரையீரல் (நிமோதோராக்ஸ்)
 • நுரையீரல் அடைப்புகள்
 • பெருநாடி அல்லது பிற முக்கிய இரத்த நாளங்களில் சிதைவுகள்
 • மண்ணீரல், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் காயம்

விலா எலும்பு முறிவுக்கு வழிவகுத்த சேதப்படுத்தும் காயம் உடலில் வேறு காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, கூடிய விரைவில் சிகிச்சை பெறுவது அவசியம்.

விலா எலும்பு முறிவுக்கான காரணங்கள்

விலா எலும்பு முறிவுகளுக்கு மிகவும் பொதுவான காரணம் மார்பில் ஏற்படும் சேதப்படுத்தும் காயம். இது பெரும்பாலும் கார் விபத்து, கீழே விழுதல், கடினமான பொருளின் மீது மோதுதல் அல்லது விளையாட்டு தொடர்பான விபத்து ஆகியவற்றால் ஏற்படலாம். இந்த வகையான விபத்துகளால் பாதிக்கப்படும் பலர் வெளிப்படையான அறிகுறிகளை அனுபவிக்காமல் விலா எலும்பு முறிவுக் காயங்களுக்கு உள்ளாகலாம். இவர்கள் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லத் தேவை இல்லை என்று முடிவெடுக்கிறார்கள். பின்னர் நுரையீரலில் துளை ஏற்படுதல் போன்ற கடுமையான சிக்கல்களை அனுபவிக்கிறார்கள்.

விலா எலும்பு முறிவுகள், மீண்டும் மீண்டும் மார்புப்பகுதியை அசைப்பதினால் அல்லது நீண்ட காலம் தொடர்ந்து கடுமையாக இருமுதல் ஆகியவற்றாலும் ஏற்படலாம். ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ அல்லது விலா எலும்புகளில் புற்று நோய் போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகள் விலா எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்தலாம்.

விலா எலும்பு முறிவின் அறிகுறிகள்

விலா எலும்பு முறிவுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் லேசான மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த வலி அதிகரிப்பதற்கான காரணங்கள்:

 • வளைத்தல் அல்லது முறுக்குதல் போன்ற இயக்கங்கள்
 • ஆழமாக மூச்சை உள்வாங்கி விடுதல்
 • பாதிக்கப்பட்ட பகுதிக்கு அழுத்தம்
 • தும்மல், இருமல் அல்லது சிரிப்பு

வலியைத் தவிர, விலா எலும்பு முறிவின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

 • அசையும் போது ஒரு நசுக்கும் அல்லது அரைக்கும் ஒலி
 • மார்பில் தசைப்பிடிப்பு
 • சுவாசிப்பதில் சிரமம்
 • விலா எலும்புகளின் சிதைந்த தோற்றம்

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்

விலா எலும்புகளில் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும். அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும் சிகிச்சை பெறுவது அவசியம். மேலும், பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படலாம்:

 • காய்ச்சல்
 • வயிற்று வலி
 • மயக்கம்
 • இரத்தம் அல்லது சளியை உருவாக்கும் இருமல்
 • சுவாசிப்பதில் சிரமம் அதிகரித்தல்

விசாரித்தல்

மார்பு எக்ஸ்ரே

மார்பு எக்ஸ்-கதிர்கள் மூலம் விலா எலும்பு முறிவுகள் அடிக்கடி ஆராயப்படுகின்றன. இடம்பெயர்ந்த மற்றும் இடமாற்றம் செய்யப்படாத எலும்பு முறிவுகள் இரண்டும் பொதுவாக எக்ஸ்-கதிர்களில் காணப்படுகின்றன. எக்ஸ்-கதிர்கள் ‘நியூமோதோராக்ஸ்’ போன்ற பிற சிக்கல்களையும் காட்டலாம். துரதிர்ஷ்டவசமாக, விலா எலும்பு முறிவுகள் எல்லா நேரங்களிலும் எக்ஸ்ரேக்களில் காண்பிக்கப்படுவதில்லை. குறிப்பாக மிகச்சிறிய எலும்பு முறிவுகள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிற வகையான கண்டறியும் ‘இமேஜிங்’(படமெடுத்தல்) தேவைப்படலாம்.

முப்பரிமாண மறுசீரமைப்புடன் CT ஸ்கேன்

விலா எலும்பு முறிவுகள் எக்ஸ்ரேக்களில் தோன்றத் தவறினால் மார்பு CT ஸ்கேன் ஒரு நல்ல மாற்றுவழி. அவை அதிக உணர்திறன் கொண்டவை. மற்றும் ஊடுகதிர் பரிசோதனையுடன் ஒப்பிடும்போது தெளிவான நோயறிதலை வழங்கக்கூடியவை. மேலும் நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் அல்லது சிறுநீரகம் போன்ற மென்மையான திசு அல்லது உறுப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை CT ஸ்கேன் காட்டலாம். சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அல்லது விலா எலும்பு முறிவுக்கு காரணமான சேதப்படுத்தும் காயம் மற்ற காயங்களையும் ஏற்படுத்தியிருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


நோயாளியின் முறிந்த விலா எலும்புகளை முப்பரிமாண முறையில் மறுசீரமைத்தல்

CT ஸ்கேன்களுடன் இணைந்தும் முப்பரிமாண முறையில் மறுசீரமைத்தல் செய்யப்படலாம். அறுவைசிகிச்சை தேவைப்படும் கடுமையான மற்றும் சிக்கலான விலா எலும்பு முறிவுகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் முப்பரிமாண மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை திட்டமிடலுக்கான காட்சிப்படுத்தல்களுக்கு உதவும்.

சிகிச்சைகள்

மருந்து / வலி நிவாரணிகள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விலா எலும்பு முறிவுகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படலாம். மற்றும் காலப்போக்கில் அவை தாமாகவே குணமாகும். விலா எலும்பு முறிவுகளால் ஏற்படும் வலியை நிர்வகிக்க, ‘இப்யூபுரூஃபன்’ அல்லது ‘நாப்ராக்ஸன்’ போன்ற பல்வேறு வலி நிவாரணிகள் உங்களுக்குப் பரிந்துரைக்கப்படலாம். கடுமையான வலி ஏற்படும் போது இன்னும் வலுவான மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

விலா எலும்பு முறிவு போதிய ஓய்வுடன் பெரும்பாலும் 6 வாரங்களில் குணமாகும். இந்தக் காலக்கட்டத்தில், ‘நிமோனியா’ மற்றும் ‘நியூமோதோராக்ஸ்’ஸைத் தடுக்க, நீங்கள் அடிக்கடி இரும வேண்டும் அல்லது ஆழமான சுவாசத்தை எடுக்க வேண்டும்.

விலா எலும்புகளை சரியான உடற்கூறியல் இடத்தில் வைக்கும் அறுவை சிகிச்சை (உலோக தகடுகள்)

இடப்பெயர்ச்சி எலும்பு முறிவுகள், 3 க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள், ‘ஃபிளேல்’ மார்பு மற்றும் மார்பில் உள்ள பிற சிக்கல்கள் முதலியவை இருந்தால், விலா எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை அவசியம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு நோயாளி விலா எலும்பு சரிசெய்தல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அங்கு உலோகத் தகடுகள் மற்றும் திருகுகள், விலா எலும்புகளை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளி சரியாக சுவாசிப்பதையும் குணமடைதலையும் உறுதிப்படுத்தும். வழக்கமான ‘பிசியோதெரபி’(உடற்பயிற்சி மூலம் சிகிச்சை) மூலம் இந்த செயல்முறைக்கான மீட்பு காலம் 3 வாரங்கள் ஆகும்.

இருப்பினும், செயல்முறையின் விளைவுகள் விரைவாகவே உணரலாம். சுமார் 3 நாட்களுக்குப் பிறகு நீங்கள் நன்றாகத் தேரி வருவதை உணரலாம்.


உலோகத் தகடுகளுடன் நோயாளியின் எக்ஸ்ரே

சுருக்கம்

விலா எலும்பு முறிவுகள் தாமாகவே குணமானாலும், உடைந்த விலா எலும்பில் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்று சந்தேகித்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். நீங்கள் வேறு எந்த காயங்களாலும் பாதிக்கப்படவில்லை என்பதை மருத்துவர் உறுதிசெய்து, கடுமையான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

விலா எலும்பு முறிவுகள் பெரும்பாலும் விபத்துகளின் விளைவாக ஏற்படுவதால், அவை ஏற்படுவதைத் தடுப்பது கடினம். விலா எலும்பு முறிவுகளை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் நீங்கள் தவறாமல் பங்கேற்றால், காயமடைவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டை நேர்த்தியாகவும், போதிய வெளிச்சத்துடன் வைத்திருப்பதன் மூலமும், சறுக்காத பாய்களைப் பயன்படுத்துவதன் மூலமும், வீட்டினுள் விழும் அபாயத்தைக் குறைக்கலாம். ஆரோக்கியமான எலும்பைப் பெறவும் அதன் வலிமையைப் பராமரிக்கவும் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘D’ உட்கொள்வதை அதிகரிப்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். இது, ஏதேனும் விபத்துகளால் நீங்கள் பாதிக்கப்பட்டால் விலா எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.